வாசகங்கள்: விப 12:1-8, 11-14 சங் 116:12-13, 15-16, 17-18 1கொரி 11:23-26, யோ 13:1-15
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
………………………………………………………………………………………………………
இறையேசுவில் பிரியமான சகோதர சகோதிரிகளே,
இன்று நாம் பெரிய வியாழன் அல்லது அன்பின் பெருவிழா அல்லது ஆண்டவரின் இராணவுத் திருப்பலியை கொண்டாடுகின்றோம். இந்த நாள் மனுகுலம் அதிகமாக அன்புசெய்யப்பட்ட நாள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றைய திருவழிப்பாடு நமக்கு முப்பெரும் விழாக்கள் முன் வைக்கின்றது.
1. ஆண்டவர் இயேசு, தம்மையே நம் அனைவருக்கும் ஆன்ம உணவாக நற்கருணையை அன்பின் சின்னமாக உருவாக்கிய நாள்.
2. குருத்துவத்தை ஏற்படுத்தி மீட்பு பணியை தொடர அருள் பணியாளர்கள் அபிஷேகம் செய்த நாள்.
3. மேலும் இயேசுவின் உடனிருப்பை வார்த்தையால் மட்டுமல்லாமல் வாழ்க்கையாலும் வெளிப்படுத்த பிறரின் பாதங்கள் கழுவி, பணி செய்ய அழைக்கின்ற நாள். இதன் வெளிப்படையாக அன்பு கட்டளை (அ) பகிர்தலை கொடுத்த நாள்…..
இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக இருக்கின்றன. முதலாவதாக, இந்த பெரிய வியாழன் திருசடங்கு, ஆண்டவருடைய அன்பை வெளிப்படுத்துகின்ற யூதர்களின் பாஸ்கா விழாவை நினைவுபடுத்துகின்றது.
இன்றைய முதல் வாசகமானது எவ்வாறு இஸ்ராயேல் மக்கள், மாசுமறுவற்ற செம்மறி ஆட்டுக்குட்டியின் இரத்தால் எகிப்தின் அடிமைதனத்திலிருந்து வெளியேறினார்கள் என்பதை விளக்குகிறது. இந்த பாஸ்கா நிகழ்வு, இயேசுவின் இரத்தால் நாம் அனைவரும் பாவ சாவினின்று விடுதலை பெறுகின்றோம் என்பதை விளக்குகிறது (திபா 20:28, 1கொரி 6:20; 7:23). யூதர்கள் கொண்டாடிய இராவுணவு விழா புதிய அர்த்தத்தையும் புதிய நோக்கத்தையும கொண்டதாக மாறுகிறது.
அடுத்தாக, இன்று நற்கருணை மற்றும் குருத்துவம்; போன்ற திருவருட்சாதனங்கள் ஏற்படுத்திய நாள். இந்த நிகழ்வை பற்றி மூன்று நற்செய்தியாளர்கள் மட்டுமன்றி புனித பவுலடியாரும் இதைப்பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைப்பார் (காண்க: மத் 26:26-29, மாற் 14:22-25, லூக் 22:14-20, மற்றும் 1கொரி 11:23-26).
நற்கருணை என்பது இயேசுவின் தொடர் பிரசன்னம் (மத் 29:20) இயேசுவை நற்கருணையிலே பெறும்போது, நம்முடைய உடலும் மனமும் தூய்மை அடைந்து, நம்முடைய பாவங்கள் கழுவப்பெற்று இழந்தபோன ஆன்மசக்தியை திரும்ப பெறுகின்றோம்.
மேலும் இந்த நற்கருணை கொண்டாடத்திலிருந்து தான் குருத்துவம் என்ற இயேசுவின் பணிவாழ்வு ஊற்றெடுக்கிறது.
குருக்களின் பணிகளை மூன்று வகையாகப் நாம் பிரிக்கலாம் : 1) நற்செய்தி அறிவிக்கும் பணி, 2) வழிநடத்தும் பணி, 3) ஆளும் பணி.
குருக்களின் நற்செய்தி அறிவிப்புப் பணி என்பது பணித்தளத்தில் மகிமைமிக்க தூய தெய்வீக திருப்பலியை ஒப்புக்கொடுப்பதிலும் மற்ற அருட்ச் சாதனங்களை நிறைவேற்றுவதிலும், சிறப்பாக நற்செய்தியை போதிப்பதிலும் மற்றும் அதை வாழ்ந்து காட்டுவதிலும் அடங்கியுள்ளது. இரண்டாவதாக, வழிநடத்தும் பணியானது பணித்தள மக்களை ஆன்மீக, சமுக தேவைகளில் தலைவராயிருந்து மக்களை வழிநடத்துவதிலும், வழிகாட்டுவதிலும் அடங்கியுள்ளது. மூன்றாவதாக, ஆழும் பணியானது பங்குத் தளத்தில் குருக்கள் நிர்வாக ரீதியாக அவர்கள் ஆற்றும் பணிகளை குறிக்கின்றது. ஆக ஓவ்வொரு குருவும், இயேசுவைப் போல, இந்த மூன்று பணிகளிலும் ஈடுபட திருநிலைப்படுத்தப் படுகின்றார்கள் (காண்க எபி 5:2-3).
ஒவ்வொரு குருவும் மனிதர்கள் தான்; பலவீனமானவர்கள்தான் தான். ஆனால் பணி குருத்துவம் பலவீனமானது கிடையாது .
மேலும் கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்ற இறை மக்கள் அனைவரும் கிறிஸ்துவின் பொது குருத்துவத்தில் பங்கு கொள்கிறார்கள். தங்களது சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவை பிறருக்கு அறிவிக்க இறை மக்கள் அனைவரும் அழைக்கப்படுகின்றார்கள். மனைவி, பிள்ளைகள் என்ற குடும்ப உறவுகளையும் தாண்டி இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்ய சிறப்பாக அழைக்கப்படுகிறார்கள்.
கடைசியாக, பாதம் கழுவும் நிகழ்ச்சியின் வழியாக தலைமை என்பது தொண்டு என்றும், தலைவன் என்பவன் தொண்டன் என்றும் இயேசு அறிமுகப்படுத்துகிறார்.
இயேசு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களையெல்லாம் கூட்டி, வகுத்து, கழித்து பார்த்தால் மீஞ்சுவது அன்பே. அன்பென்னும் பேருண்மையை மையமாக வைத்தே போதித்தார் இயேசு. நான் உங்களை அன்பு செய்தது போலவே, நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள்- என்ற கிறிஸ்துவின் அன்பு கட்டளையை பின்பற்றி இயேசுவின் அன்பிற்கு சாட்சிகளாய் வாழ, விளங்க முன்வருவோமாக.