திருப்பாடுகளின் வெள்ளி – 29 மார்ச் 2024
வாசகங்கள்: எசாயா 52:13-53:12 சங் 31:1இ 5இ 11-2இ 14-15இ 16-24 எபி 4:14-16, 5:7-9 யோ 18:1-19:42
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
…………………………………………………………
“கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவிற்கு கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.” (பிலிப் 2:6-11).
இறையேசுவில் பிரியமானவர்களே!
பல வருடங்களுக்கு முன்பு ஜெர்மானிய இளவரசர் ஒருவர் இங்கிலாந்திலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றிப் பார்க்க சென்றாராம். அப்போது அந்த அரண்மனையில் மாட்டப்பட்டிருந்த அரசர் அரசிகளின் படங்களைப் பார்த்த இளவரசர், சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த படத்தைப் பார்த்து கேட்டாராம்: “ஏன் இந்த அரசர் முட்கிரீடத்தை அணிந்திருக்கிறார்?” என்றும் அந்த சிலுவையின் உச்சியில் எழுதப்பட்டிருந்த வசனமான “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்பதற்கு பொருள் என்னவென்றும் கேட்டாராம். அப்போது அந்த அரண்மனையை சுற்றிக் காண்பிக்க வந்த வழிகாட்டி, இயேசுவினுடைய புனித வாழ்க்கை சரித்திரத்தை விளக்கிக் கூறியபொழுது, அரசர் உள்ளம் நெகிழ்ந்து போனாராம். மேலும் அந்தப் படத்தின் அடியில் எழுதப்பட்டிருந்த வேறொரு வசனத்தையும் வாசித்தாராம்: “உனக்காக நான் இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டேன். நீ எனக்காக என்ன செய்தாய்?” இந்த வசனங்களையெல்லாம் ஆழமாக யோசித்த இளவரசர் பின்பு மனம்மாறி ஒரு கிறிஸ்தவரானாராம்.
ஆம் அன்பர்களே, இன்றைய தினம் ஒரு புனிதமான நாள். நம்முடைய மீட்பின் நாள். ஆண்டவர் இயேசு, நம்முடைய பாவங்களுக்கு மரித்து நம்மை தம்முடைய இரக்கத்தினால் நித்திய வாழ்விற்கு ஈன்றெடுத்த நாள். திருத்தூதர் பணி 20:28-ல் வாசிக்கின்றோம், “கடவுள் தமது இரக்கத்தினால் நம்மை சொந்தமாக்கிக் கொண்டார்” என்று. அதேப்போல், புனித பவுல் அடியார் 1கொரி 6:20 மற்றும் 7:23-ல் “நீங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தால் விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறுகின்றார்.
திருச்சிலுவை கிறிஸ்துவின் பிரசன்னத்திற்கு அடையாளமாக திகழ்கின்றது. ஆகவே தான், இந்தத் துன்பங்களின் வழியாக, நம் மீட்பர் சிலுவையில் தொங்கி நமக்கு மீட்பளித்தார். ஆகவே, இந்த திருச்சிலுவை சுரூபம் கழுத்தில் தொங்கப்படுவதைவிட, உள்ளத்தில் தாங்கப்பட வேண்டும். சிலுவையில் உயர்த்தப்பட்ட இயேசுவை உற்று நோக்குவது, அவரில் விசுவாசம் கொண்டு நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு சமம்.
இன்று நாம் செய்கின்ற சிலுவை ஆராதனைச் சடங்கு, நம்மையெல்லாம் இறைவன் ஆழமாக அன்பு செய்கின்றார் என்ற உண்மையை நமக்கு ஆணித்தரமாகக் காட்டுகின்றது. தம் மக்களுக்காக எத்தனையோ தலைவர்கள், உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால், வரலாற்றில் எவரது இரத்தமாவது பாவக்கறைகளைக் கழுவியதாக நாம் அறிந்ததே கிடையாது. மாறாக, கல்வாரி மலையில், பெரிய வெள்ளிக்கிழமையன்று மனித குடும்பத்திற்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் ஒப்புயர்வற்ற இரத்தம் மட்டுமே: “பலருடைய பாவங்களுக்காக சிந்தப்படும் என் இரத்தம்” (மத் 26:29).
ஆம், அன்பானவர்களே, ஆண்டவர் இயேசுவின் சிலுவைச் சாவு நம் அனைவருக்கும் வாழ்வை பெற்றுத் தந்திருக்கின்றது. பாடுகளின்றி மகிமை இல்லை, சாவின்றி வாழ்வில்லை.
நம்முடைய வாழ்க்கையில், துன்பம் மற்றும் சிலுவையின் நமது கருத்தென்ன?
இந்தப் பெரிய வெள்ளி, என் வாழ்வில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா?