ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு – 24 மார்ச் 2024
வாசகங்கள்: ஏசா 50:4-7, சங் 22:7-8, 16-17, 18-19, 22-23 பிலிப் 2:6-11 மாற்கு 14:1-15:47
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
………………………………………………………………………………………………
நம் ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளின் புனித வாரத்தை குருத்து ஞாயிரோடு தொடங்குகின்றோம். இந்த புனித வாரம் நம்மை ஒரு புனித வாழ்வு வாழ அழைக்கும ஒரு புண்ணிய காலம் ஆகும். இன்றைய கலாசாரத்தில் ஊர்வலங்கள் நடைபெறுவது சாதாரண நிகழ்வு. ஆனால் ,யேசு மேற்கொண்ட எருசேலம் பயணம், அவர் சாவதற்காக சென்ற ஒரு புனித பயணமாகும். சிலுவைச்சாவை விரும்பி ஏற்றுக்கொள்கின்றார்.
எருசேலமில் தமக்குச் சிலுவை மரணம் காத்திருக்கிறது என்று தெரிந்தும், அதை எதிர்கொள்ள கழுதை மீது ஏறி கம்பிரமாக கழுதை மீது ஏறி அமர்ந்து கொண்டு எருசேலமிற்கு செல்கிறார். இயேசுவினுடைய எருசேலம் பயணம் ஒரு லட்சிய பயணம், ஒரு புரட்சி பயணம் என்று தான் சொல்ல வேண்டும். புனித லூக்கா நற்செய்தியில் மட்டும் 94 முறை எருசேலமை பற்றிய குறிப்பினைப்பற்றி படிக்கின்றோம். இந்த எருசேலமில் வெற்றிவீராய் பவணி வந்த நிகழ்வை நான்கு நற்செய்தியாளர்களுமே குறிப்பிடுகின்றார்கள் (மத் 21:1-9, மாற் 11:1-10, லூக் 19:28-38, யோ 12:9-19).
ஆம் அன்பர்களே! புகழ்பெற்ற எருசேலம் நகரப்பயணம் ஆண்டவர் இயேசுவின் இறுதிபயணத்தின் தொடக்கமும் முடிவும் ஆகும். பயணம், பட்டங்கள், பதவிகள் பெறுவதற்காக அல்ல. மாறாக, இது மரணத்தை தேடிய புரட்சிப்பயணம் மேலும் இது புகழை தேடிய பயணம் அல்ல, மாறாக புதைக்கப்படும் இடத்தை தேடிய பயணம் ஆகும்.
இன்றைய குருத்து ஞாயிறு விழாவின் பாடங்கள் என்ன?
முதலாவது ஆண்டவர் இயேசு கழுதையின் மீது அமர்ந்து ஊர்வலமாக எருசேலுமிற்குள் நுழைந்தார் என்று பார்த்தோம்.
சக்கரியாஸ் 9:9-ல் வாசிக்கின்றதைப்போல: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்:அவர் நீதியுள்ளவர், வெற்றி வேந்தர், எளிமை உள்ளவர், கழுதையின் மேல், கழுதை குட்டியான, மறியின் மேல் ஏறி பவணி வருகின்றார். ஆம் அன்பர்களே! இயேசுவை சுமந்து சென்ற கழுதை குட்டியைப்போல, நாமும் நம் ஆண்டவர் இயேசுவை, உடல் ரீதியாக சுமக்கவில்லையென்றாலும், நம்முடைய உள்ளத்திலே, நம்முடைய வாழ்க்கையில், இயேசுவினுடைய கொள்கைகளையாவது சுமக்க முன்வர வேண்டும் என்பது குருத்து ஞாயிறு தரும் முதல் பாடமாகும்.
இரண்டாவது, ஊர்வலத்தில் பங்கெடுத்த மக்களுடைய செயல்கள் போல நம்முடைய செயல்பாடுகளும் அமையக் கூடாது. முதல்நாளில் “ஒசான்னா” என்று பாடிய கூட்டம் சில நாட்கள் கழித்து “அவனை சிலுவையில் அறையும்” என்று கோஷமிட்டு இயேசவைவிட்டு விலகுவதைப்பற்றி பார்த்தோம். நாமும் கூட ஒசான்னா பாடி இன்று ஆலயத்தின் உள்ளே செல்கின்றோம். ஆனால், புனித வெள்ளி அன்று அந்த மக்களைப்போல ஒருவேளை இயேசுவை நோக்கி அவனை சிலுவையில் அறையும் என்று சொல்லாமல் தவிர்ப்பது சாலசிறந்தது.
மூன்றாவது நாம் பவணியின் போது கையிலேந்திய ஒலிவ மர குருத்து: ஒலிவ மர குருத்துகளை விழா காலங்களில் யூதர்கள் அதிகமாக பயன்படுத்தினாலும், பொதுவாக அது வெற்றியின் அடையாளம். இது இயேசு சாவின் மீது கொண்ட வெற்றியையும் சுட்டிக் காண்பிக்கிறது.
திருவெளிப்பாடு 7:9-ல் “விண்ணகத்தில் பெருந்திரளான மக்கள் குருந்தோலை ஏந்தியவர்களாய் இருந்தார்கள்” என்று வாசிக்கின்றோம். ஆம், இது தீமையின் மேல் அவர்கள் கொள்கின்ற வெற்றியை காட்டுகிறது. எனவேதான் பாடுகளின் ஞாயிறான இன்று நாம் தீமையை எதிர்த்து நிற்க சபதம் எடுத்து, இறைவனின் பாடுகளிலும், அவருடைய துன்பங்களிலும் விசுவாசத்தோடு பங்குகொள்ள முன்வருவோம்.
To Download the Text click Here