தவக்காலம் - ஐந்தாம் ஞாயிறு – 17 மார்ச் 2024
வாசகங்கள்: எரே 31:31-34, எபி 5:7-9 யோவா 12:20-33
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று, இறைவார்த்தை வழிபாடு நம்மை இயேசுவோடு இணைந்து பயணித்து, அவரது துன்பத்தில் பங்குகொள்ள அழைப்பு விடுக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம், தன்னையே உலக மீட்பிற்காக கையளித்த இயேசுவின் சிறந்த எடுத்துக்காட்டை நம்முடைய இறைச்சிந்தனைக்கு முன்வைக்கின்றது : “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை தரும்.
தன்னையே மாய்த்துக் கொள்கின்ற மற்றும் மண்ணில் மறைத்துக் கொள்கின்ற விதையினால்; மட்டுமே புதிதான மற்றும் நிறைவான விளைச்சலையும் புதிய வாழ்வையும் கொணர இயலும். இவ்வாறாக இவ்விதையைப்போல் தன்னையே இறைச்சிந்தனையிலும் மற்றும் நற்செயல்பாடுகளிலும் மறைத்து ‘தான்’ என்ற கர்வத்தை ஒழித்தால் மட்டுமே சீடத்துவம் என்ற புதிய வாழ்க்கை கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவரிலும் வெளிப்படும்.
இந்த கோதுமை மணியைப்போலத் தான் இயேசு இவ்வுலகத்தின் மீட்புக்காக தன்னையே முழுமையாக இழக்கிறார். இறையச்சம் கலந்த உணர்வோடு இறைவனின் திட்டத்திற்கு தன்னையே ஒப்புக்கொடுக்கிறார் இயேசு. இந்த கருத்தையே இன்றைய முதல் வாசகமும் தெளிவுற வலியுறுத்துகின்றது. ‘யாவே’ இறைவன் முற்காலத்தில் இஸ்ராயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை புதுப்பித்து, தம்முடைய புதிய சட்டத்தை மக்களின் மனதிலே பதிக்கின்றார். இந்த புதிய உடன்படிக்கையின் வாயிலாக எல்லா மக்களும் இறைவனை அறிந்துகொண்டவர்களாக அவருடைய மக்களாக வாழவும் அழைப்பு விடுக்கின்றார்.
இங்கு புதிய உடன்படிக்கையான இயேசுவின் தியாக வாழ்வானது தம் சீடர்களுக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாக அமைகின்றது. இயேசுவைப் பின்பற்றுகின்ற அவருடைய சீடர்கள் இயேசுவைப்போல தங்களையே இழக்க தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இழப்பில் தான் வாழ்வு கிடைக்கும். இழப்பில் தான் நிறை வாழ்வு முழுமை பெறும்.அதிலும் குறிப்பாக தன்நலம் கருதாது, பிறர்நலம் நாடுகின்ற வாழ்க்கை மட்டுமே பயனுள்ள கிறிஸ்துவ சீடத்துவ வாழ்வாகும்.
கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வு என்பது கிறஸ்து அவனாக, கிறிஸ்து அவளாக இருக்க வேண்டும். இது தான் ‘மறுகிறிஸ்துவாக’ வாழ்வதின் அடையாளம். ஏனென்றால் இயேசுவை பின்பற்றுவோர், அவரைப்போலவே அவரவர் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களையும் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிலுவைகளை சுமக்காமல், அவைகளை முழுமனத்தோடு ஏற்காமல் இருப்பவர்கள் அவருடைய உண்மைச் சீடர்களாக இருக்க முடியாது, வாழ முடியாது.
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். பிறருக்காக வாழும்போது வாழ்வு அர்த்தம் பெறுகிறுது. இயேசுவினுடைய தன்னலமற்ற வாழ்வு, தியாகம், சிலுவைச் சாவு நமது வாழ்வாகட்டும். எந்த ஒரு சீடர் இயேசுவின் இறப்பையும், உயிர்ப்பையும் ஒன்றாகப் பார்கின்றாரோ, அவரால் மட்டுமே ஒரு அர்த்தமுள்ள சீடத்துவ வாழ்க்கையை வாழமுடியும். கிறிஸ்தவ விழுமியங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியும்.
இயேசுவில் பயணிப்போம் இறுதிவரை…
Download the Tamil Sermon Here