தவக்காலம் - நான்காம் ஞாயிறு - 10 மார்ச் 2024
வாசகங்கள்: 2குறி 36:14-16, எபே 2:4-10 யோவா 3:14-21
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
ஒரு தந்தையும் அவரின் இளம் வயது மகனும் காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். ஓரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அவர்கள் ஒரு பாலத்தைக் கடக்க நேர்ந்தது. அப்போது தந்தை தன்னுடைய மகனைப் பார்த்து, “மகனே இந்தப் பாலம் மிகவும் பேரிடரானது. எனவே எனது கையைப் பிடித்துக்கொள்;, கவனமாக நாம் பாலத்தைக் கடந்துவிடலாம்” என்றார். அதற்கு மகன் “இல்லை அப்பா நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான். அதற்கு அந்தச் சிறுவனின் தந்தை “நான் கூறியதற்கும் நீ கூறியதற்கும் வேறுபாடு என்ன? என்று கேட்க அவன் “வேறுபாடு உண்டு” என்றான். “நான் உங்கள் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தேன் என்றால் ஒருவேளை கால் தடுமாறி கீழே விழ நேரிடும். அவ்வேளையில் நான் உங்கள் கையை பயத்தில் விட்டுவிடக்கூடும். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்தீர்களேயானால் நான் தடுமாறி விழுந்தாலும் உங்கள் கை என்னைக் கீழே விழ விட்டுவிடாமல் தாங்கிப் பிடித்துக்கொள்ளும்” என்று பதிலளித்தான் அந்தச் சிறுவன்.
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் அனைவரும் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு நிலைவாழ்வு பெற இறைவனுடைய வார்த்தை நமக்கு அழைப்பு விடுக்கின்றது. தவக்காலம் என்பது கடந்து செல்வதற்கு அல்ல. மாறாக, இறைமகன் இயேசுவோடு நடந்து செல்வதற்கு…
இன்றைய இறைவார்த்தை வழிபாட்டினுடைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் எபேசிய திருஅவைக்கு எழுதிய மடலில் “இறைவன் தன்னுடைய அளவு கடந்த இரக்கத்தினால் நம்மை மீட்டு நம்பிக்கையின் வழியாக அருள் வாழ்வில் நிலைபெற செய்கின்றார்” என்று கூறி தம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றார். மேலும் கடவுள் நம்மீது மிகுந்த இரக்கம் கொண்டுள்ளார் என்பதைப்பற்றி மிக ஆழமாக தம் மடலில் விளக்குகிறார். இயேசு நம்மிது இரக்கம் கொண்டுள்ளார். ஆகவே பாவத்தினால், பாவச் சூழலினால், இதயச் செருக்கினால் நாம் இறந்தவர்களாயிருந்தும் இறைஇரக்கத்தால் கடவுள் நம்மை இயேசுவோடு உயிர் பெற செய்துள்ளார் என்கிறார் புனித பவுல் அடியார். இது கடவுள் உலகின் மேல் எவ்வாறு முழுமையான அன்பு கொண்டுள்ளார் என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்க படம்பிடித்து காட்டுகின்றது. நாம் இயேசுவின் அன்பில் இணைந்திருந்தால், நாமும் பாவ மன்னிப்பு பெற்று, உயிர்த்தெழுந்து விண்ணுலகில் அவரோடு அவரின் வலப்பக்கம் அமருவோம் என்பது திண்ணம்.
கடவுள் இயேசு கிறிஸ்து வழியாக நமக்கு செய்த அனைத்து நன்மைகளும், அவர் நமக்கு கொடுத்த ஒப்புயர்வற்ற அருள் வளங்களை குறிக்கின்றது இறைவனின் அருள் வரங்களை பெற்ற நாம் அனைவருமே இறைவனின் வேலைப்பாடுகள், அவரால் படைக்கப்பட்டவர்கள். அப்படியெனில், நாம் அனைவரும் நற்செயல்கள் புரிந்து வாழ வேண்டும்; அதுவே நம்மை புனித வாழ்வுக்கு அழைத்து செல்லும் என்று அறைகூவல் விடுகின்றார் புனித பவுலடியார்.
மேலும் இறைவனின் படைப்புகளான மனிதர்களாகிய நாம் அனைவரும் நற்செயல்கள் புரிந்து வாழ்வது இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவன் நமக்குக் கொடுத்த இறைத்திருவுளம்”;. இக்கருத்தைத் தழுவியே முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பி இஸ்ரயேல் மக்கள் எருசலேமில் உள்ள அவருடைய திருக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்புவதும் இறைத்திருவுளம் என்பதை அறிகின்றோம்.
இன்றைய நற்செய்தி “இறைவனில் நம்பிக்கை கொண்டு வாழ்வது” என்ற கருத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. கடவுள் நம்மையெல்லாம் அளவிடற்கரிய வகையிலே அன்பு செய்ததன் வழியாக தம்முடைய ஒரே மகனை இவ்வுலகத்தின் மீட்பிற்காய் அனுப்பினார். ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வது நமக்கு மீட்பைப் பெற்றுத் தரும். மேலும் இன்றைய நற்செய்தியில், “அவர் மீது நம்பிக்கை கொள்வோர்” என்ற சொற்றொடர், சுமார் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நம்பிக்கை கொள்வதும் இறைவனை சார்ந்து வாழ்வதும் இறைத் திருவுளத்தை நிறைவேற்றுவதில் அடங்கியுள்ளது. அதுவே நம்மை நிலைவாழ்விற்கும் கொண்டு செல்லும்.
இயேசுவில் நிலைவாழ்வு பெறுவது என்பது, இயேசுவை உலகிற்கு வந்த இறைவனுடைய ஒளியாக ஏற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கிறது. அவ்வாறாக ஏற்றுக்கொள்வது இறை இயேசுவின் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கையை சுட்டிக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியாளர், யேசுவை உலககிற்கு வந்த ஒளியாக உருவகப்படுத்துகின்றார். மேலும், யோவான் நற்செய்தியில், ஒளி மற்றும் இருள் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுவதை பார்க்கின்றோம். ஒளியானது, நம்பிக்கைக்கு இட்டு செல்கின்ற புனித வாழ்வையும், இருளானது சாவிற்கு இட்டுச் செல்கின்ற பாவங்களையும் குறிப்பதாக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகின்றார். ஆகவேதான் யோவான் 10:10-ல், இயேசு, தன் ஆடுகள் நிலை வாழ்வு பெறும்பொருட்டு வந்திருக்கிறேன் என்று பறைசாற்றுகிறார்.
இயேசுவை தூய இறைவனின் ஒளியாக ஏற்றுக்கொள்ளாதவர்கள், பாவிகளாக, இருளையே நாடுகின்றனர். இறைவனின் ஒரே மகனாகிய இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அழிந்துபோகாமல், நிலைவாழ்வு பெறுவது உறுதி. பாவிகளாய் இருந்த நாம் அனைவரும் அழிந்து போகாமல் இருக்க, கடவுள் தம் மகன் இயேசுவை நமக்கு கல்வாரியிலே பலியாக ஒப்புக்கொடுத்து தம் அளவற்ற அன்பை வெளிப்படுத்திய தந்தையாம் இறைவனை விசுவசித்து மனம் திரும்புவோம், இந்த தவக்காலத்தில், இயேசு நாம் திருந்தி வர வேண்டும் என்பதை விட, கடந்து திரும்பி வர வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றார்.
இறுதியாக, இயேசுவில் நம்பிக்கைக் கொள்ளாதோர் இறைவனுடைய அன்பையும் இரக்கத்தையும் வாழ்வில் உணர முடியாது. நிலை வாழ்வில் பங்கு கொள்ள முடியாது.