தவக்காலம் மூன்றாம் ஞாயிறு – மார்ச் 3, 2024
வி.ப. 20:1-17, 1கொரி 1:22-25, யோவான் 2:13-25
அருட்பணி பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று, தாய் திருச்சபை வணிக வளாகமாக மாறியிருந்த எருசலேம் கோயிலை ஆக்ரோஷமாக இயேசு கோவிலிலிருந்து எல்லோரையும் துரத்துவதை நம்முடைய இறைசிந்தனைக்கு முன்வைக்கிறது. புனித யோவான் நற்செய்தியில் இந்த கோவிலை சுத்தம் செய்கின்ற நிகழ்வு, நற்செய்தியின் தொடக்கத்திலே இடம்பெற்றிருக்கிறது என்றால் ஒத்தமை நற்செய்திகளில் (மாற்கு 11:15-17, மத் 21:12-13, லூக் 19:45-46) இந்த நிகழ்வு கடைசியில் இடம்பெறுகிறது.
இந்த நிகழ்வை படிக்கின்ற பொழுது நம்முடைய மனங்களில் எழுகின்ற முதல் கேள்வி: எதற்காக இயேசு கோவிலில் விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்தவர்களை துரத்தினார்? (அ) அதனுடைய அர்த்தம் தான் என்ன? இயேசுவின் போராட்டம் ஒட்டுமொத்த யூத சடங்குமுறைகளை சாடுவதாக, இந்த நிகழ்வு நமக்கு எடுத்தியம்புகிறது. யூத முறைப்படியான சடங்குகளில் மிருகங்களை பலியிடுவது ஒரு சாதாரண, பயனில்லா சடங்காக இருந்தது. மேலும் பலியிடப்பட்ட இடமும் ஒரு அருவருப்பான இடமாக இருந்திருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் கொடுக்கல், வாங்கல் இருக்க கூடாது என்பது இயேசுவின் வாதம்.
ஏற்கெனவே ஓய்வு நாளைப்பற்றி பரிசேயர்களை சாடிய இயேசு, தன்னுடைய அதிரடி நடவடிக்கையால் புனிதமான கோவிலை எல்லோரும் இறைதந்தையின் இல்லமாக அதை கண்கொள்ள வேண்டும் என்று இயேசு அனைவரையும் கண்டிக்கிறார்.
இயேசு எருசலேம் கோவிலுக்கு சென்று இறைவேண்டல் செய்தாலும், அதனை அர்த்தமாக வைத்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அந்த வேளையில் தன்னை எதிர்த்த யூதர்களுக்கு ஒரு சவாலை முன்வைக்கிறார். கோவிலாகிய தன்னுடைய புனித உடலை சிலுவை சாவின் காரணமாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்தாலும், கடவுளுடைய மகன் என்ற வல்லமையால் தாம் மீண்டும் உயிர்பெற்று எழுவார் என்பதைப் பற்றி போதிக்கிறார். இதையே 2பேதுரு 3:18-22ல் “மனித இயல்பில் இறந்தாலும் ஆவிக்குரிய இயல்பில் உயிர்பெற்றிருந்தார்” என்று கூறுகிறார் புனித பேதுரு. இந்த கருத்தின் வெளிப்பாடாக இன்றைய முதல் வாசகத்தில் யாவே இறைவன் தன்னுடைய கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கும் அனைவரும் தண்டிக்கப்படுவர் என்று கூறுகின்றார்.

👇Download Pdf here in Tamil
Very Nice Reflection.
ReplyDelete